Dermatomyositis.. தங்கல் பட இளம் நடிகை இறப்பிற்கு காரணமான அரிய வகை நோய்! அறிகுறிகள் என்ன?
அமீர்கான் நடிப்பில் மல்யுத்தத்தை கதைக்களமாக கொண்டு வெளியான திரைப்படம் ’தங்கல்’. இத்திரைப்படத்தின் பபிதா குமாரி கதாப்பாத்திரத்தில் நடித்த சுஹானி பட்நாகர் இறப்பிற்கான காரணம் வெளியாகி உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் மல்யுத்தத்தை கதைக்களமாக கொண்டு வெளியான திரைப்படம் ’தங்கல்’. இதில் பபிதா குமாரியின் சிறுவயது கதாபாத்திரத்தில் கலக்கியிருந்த சுஹானி பட்நாகர் என்ற 19 வயது இளம் நடிகை, உடல்நலக்குறைவால் காலமாகியிருப்பது ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இவரது மரணத்திற்குரிய காரணங்கள் என்னவென்று அறியப்படாத நிலையில், தற்போது அதற்கான தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சுஹானி பட்நாகரின் தந்தை கூறுகையில், ”இரண்டு மாதங்களுக்கு முன்பு சுஹானி கைகளில் சிவப்பு புள்ளி ஏற்பட்டது. இதனை அலர்ஜி என நினைத்து வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றோம். ஆனால் என்ன நோய் என்று கண்டறிய முடியவில்லை.
இதனையடுத்து சுஹானியின் உடல் நிலை மோசமடைய தொடங்கியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவள் கைகளில் வீக்கம் ஏற்பட்டு, வீக்கம் அதிகரிக்க தொடங்கியது.மேலும் இந்த வீக்கம் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவ தொடங்கியது. இந்நிலையில் AIIMS மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துவந்தோம். ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
மேலும் வீக்கம் அதிகரித்தநிலையில் , ’நுரையீரலில் தொற்று ஏற்பட்டு நுரையீரலில் திரவம் தேங்க ஆரம்பித்துவிட்டது’ என்று மருத்துவர்கள் கூறினர். மேலும் ஆக்ஸிஜன் அளவும் குறைய தொடங்கியது.
இந்நிலையில் அவளுக்கு கொடுக்கப்பட்ட ஸ்டெராய்டுகளால் அவளது நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டது. வெண்டிலேட்டரில் வைத்தபோதும் ஆக்ஸிஜனின் அளவு குறைந்துதான் காணப்பட்டது. பின்னர் அவர் உயிரிழந்தாதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.” என்று தெரிவித்தார்.
அவரது தாய் இவரை குறித்து தெரிவிக்கையில், ”அவள் கல்லூரியில் மிக சிறப்பாக படித்துவந்தார். கடைசி செமஸ்டரில் கூட முதல் மதிப்பெண் பெற்றாள். அவள் என்ன செய்ய விரும்புகிறாளோ அதனை சிறப்பாக செய்வாள். எங்களை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளாள்.’” என்று மனம் வெதும்பி கூறியிள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெர்மடோமயோசிடிஸ் (Dermatomyositis)
அறிகுறிகள்:
இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சோர்வு, காய்ச்சல், எடை இழப்பு, தலைவலி, கண் இமைகள் தொங்குதல், சுவாசிப்பதில் சிரமம், தோல் சிவப்பு நிறமாக மாறுதல், கண் பகுதியில் வீக்கம் ஆகியவை அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்பொழுது மருத்துவரை பார்க்கணும்?
நம் உடலில் உள்ள தசைகள் பலவீனம் அடையும் பொழுதோ அல்லது சொல்ல முடியாத அளவிற்கு சொறி தன்மை ஏற்பட்டாலோ மருத்துவரிடன் உதவியை உடனே நாட வேண்டும். அதாவது, வயலட் நிறத்தில் அல்லது மங்கலான சிவப்பு சொறி உருவாகும். அரிப்பு மற்றும் வலியுடன் கூடிய சொறி இந்த நோயின் அறிகுறி.