பாலியல் வன்கொடுமை வழக்கில் தேரா சச்சா சவ்தா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு குர்மீத் ராம் தற்போது அடைக்கப்பட்டுள்ள ரோதக் சிறைக்கு வந்து நீதிபதி தீர்ப்பு வழங்கவிருக்கிறார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என கடந்த 25 ஆம் தேதி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவுடன் ஹரியானா மற்றும் பஞ்சாபில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் ஊடக வாகனங்கள், போலீசார், பொதுமக்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். வன்முறைகளில் 30-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 250 பேர் காயமடைந்துள்ளனர். குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை விவரம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு குர்மீத் ராம் தற்போது அடைக்கப்பட்டுள்ள ரோதக் சிறைக்கு வந்து நீதிபதி தீர்ப்பு வழங்கவிருக்கிறார்.
தீர்ப்பின் விவரம் வெளிவந்த பின்னர் கலவரம் வெடிக்காமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வன்முறை காரணமாக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டிருந்த பெரும்பாலான ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் தண்டனை விவரம் வெளியாக உள்ள காரணத்தால், டெல்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளை மூட உத்தரவிட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் உலாவரும் செய்திகளில் உண்மையில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.