குறிப்பாக தலைநகர் டெல்லியில், குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சாலையோரம் வசிப்பவர்கள் லோதி ரோடு பகுதியில் இருக்கும் இரவு நேர முகாமில் தங்க வைக்கப்பட்டனர். குளிரின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக, அதிகாலையிலேயே பலர் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். நகர் முழுவதும் சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால், கடும் சிரமத்திற்குள்ளான வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
அங்கு 12 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி மட்டுமல்லாமல் பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. கான்பூரில் இரவு முதல் அதிகாலை வரை பனி அதிகரித்ததால், குளிரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிந்து பயணித்தனர்.