கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கிறார்கள் தமிழர்கள். தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் தங்கள் நிலை மாறவில்லை என்ற வேதனைக்குரல் மட்டுமே அவர்களிடம் ஒலிக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. முதலாவதாக 14 மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவருமான குமாரசாமி களமிறங்கி உள்ள மாண்டியா தொகுதி கவனத்தை ஈர்க்கும் தொகுதிகளில் ஒன்றாக உள்ளது.
இந்த தொகுதிக்கு உட்பட்ட நேருநகரில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக தலைமுறை தலைமுறையாக 500-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. சிறிய குடிசை வீடுகளில் வசிக்கும் அவர்கள், அடிப்படை வசதிகள் எதுவுமின்றி சிரமப்படுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.அதே நேரத்தில் பட்டா இல்லை என தெரிவித்து தங்களை அகற்ற கர்நாடகா அரசு முயல்வதாகவும் தமிழர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தேர்தல் சமயத்தில் எட்டிப் பார்க்கும் அரசியல்வாதிகள் அதன்பிறகு கண்டுகொள்வதில்லை என்றும் மனக்குமுறலை கொட்டியுள்ளனர் அங்குள்ள தமிழர்கள் அப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் 100 ஆண்டுகளுக்கு முன்பு அணை கட்டும் பணிக்காக அங்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற நிலை மாறி, அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்பதே நேருநகரில் வசிக்கும் தமிழர்களின் முதல் கோரிக்கையாக இருக்கின்றது.