“பணமதிப்பு நீக்க திட்டம் தோல்வி என்பது தவறு” - அருண் ஜெட்லி

“பணமதிப்பு நீக்க திட்டம் தோல்வி என்பது தவறு” - அருண் ஜெட்லி
“பணமதிப்பு நீக்க திட்டம் தோல்வி என்பது தவறு” - அருண் ஜெட்லி
Published on

பணமதிப்பு நீக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிந்து 3வது ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பணமதிப்பு நீக்கத்தால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 கோடியே 80 லட்சத்திலிருந்து 6 கோடியே 86 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் இதனால் கிடைத்த தொகை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். சாலை, மின்சாரம் உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களுக்கும் அதிகம் செலவிட முடிந்ததாகவும் இதனால் சாமானிய மனிதனின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதாகவும் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

புழக்கத்தில் உள்ள உயர் மதிப்புள்ள ரூபாய் தாள்களை திரும்பப் பெறுவது அரசின் நோக்கமல்ல என்றும் பொருளாதாரத்தை முறைப்படுத்துவதே பணமதிப்பு நீக்கத்தின் நோக்கம் என்றும் இது நிறைவேறியுள்ளதாகவும் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஆனால் புழக்கத்தில் இருந்த பணம் பெருமளவு ரிசர்வ் வங்கிக்கு திரும்பியதால் பணமதிப்பு நீக்க திட்டம் தோல்வி என விமரிசிப்பது தவறானது என்றும் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். பணமதிப்பு நீக்கத்தால் 10 ஆயிரத்து 720 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்பதையும் ஜெட்லி சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனிமனிதரால் நாட்டில் நிகழ்த்தப்பட்ட பேரிடர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விமர்சித்துள்ளார். 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு தினத்தையொட்டி ட்விட்டரில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். வங்கிகளில் முடிவே இல்லாமல் நீண்ட வரிசையில் மக்களை நிற்கவைத்து, அலைக்கழித்ததோடு மட்டும் அல்லாமல் வங்கி வாசல்களிலேயே அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிரை இழந்த கொடுமையை இந்த நாடு மறவாது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். லட்சக்கணக்கில் வேலை வாய்ப்புகள் பறிபோனதோடு, சிறு குறு நிறுவனங்கள் மூடு விழா கண்டு நாட்டின் பொருளாதாரமே பின்னோக்கி தள்ளப்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி துணிச்சலுடன் அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால்,‌ நாடு வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதுக்கலில் ஈடுபடுபவர்களும், பயங்கரவாதிகளுமே இந்நடவடிக்கையை எதிர்ப்பார்கள் எனக் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com