28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், அனைவரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி, முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்பட 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ், தீர்ப்பின்போது, குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் காணொளி மூலமாக இன்று ஆஜர் ஆனார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 26 நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். 2000த்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை நீதிபதி எஸ்.கே யாதவ் வாசித்தார். பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்தார். அதன்படி வழக்கு தொடர்புடைய அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.