இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா திரிபு, தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் தீவிரமாக பரவிவருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
கொரோனா பல திரிபுகளாக, பல்வேறு மாற்றங்களுடன் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இவற்றில் ஒன்றுதான், கடந்த வருட இறுதியில் கண்டறியப்பட்ட பி.1.617 வகை திரிபுடைய இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகை. மூன்று வாரங்களுக்கு முன்புதான், இதற்கு ‘டெல்டா’ கொரோனா என்று பெயரிட்டனர் அறிவியலாளர்கள். தற்போது இதுவும் திரிந்து, டெல்டா ப்ளஸ் ஆக பரவி வருகிறது.
டெல்டா ப்ளஸ் கொரோனா வகை, இந்தியாவில் 22 பேருக்கு கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசியிருக்கும் அவர், இவ்வகை டெல்டா ப்ளஸ் கொரோனா, உலகளவில் இங்கிலாந்து, அமெரிக்கா, போர்ச்சுகல், சுவிட்ஸலார்ந்து, ஜப்பான், போலாந்து, நேபாளம், சீனா, ரஷ்யா ஆகிய 9 நாடுகளுக்கு பரவியிருப்பதாக கூறியுள்ளார்.
முன்னதாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா, தற்போது 80 நாடுகளில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
இந்திய மாநிலங்களை பொறுத்தவரை மகாராஷ்ட்ரா, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் கொரோனா திரிபு கண்டறியப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார் செயலாளர் ராஜேஷ். இவற்றில் மகாராஷ்ட்ராவில்தான் அதிகமாக இந்த வகை திரிபு கண்டறியப்பட்டு வருகிறது.
மகாராஷ்ட்ரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் நேற்று தெரிவித்த தகவலின்படி அங்கு இதுவரை 21 பேருக்கு டெல்டா ப்ளஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், 7,500 பரிசோதனைகளில் 21 தான் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதால், இங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதென நம்பிக்கை தெரிவித்திருந்தனர் அம்மாநில அதிகாரிகள். இதுதவிர கேரளாவில் 3 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் ஒருவருக்கும் இவ்வகை டெல்டா ப்ளஸ் திரிபு உறுதிசெய்யப்பட்டது.
தொடர்ச்சியாக டெல்டா ப்ளஸ் கொரோனா திரிபு பரவி வரும் நிலையிலும், மத்திய அரசு அதை தாங்கள் கவலையளிக்கும் வகைக்கு உட்படுத்தப்படவில்லை என கூறியிருப்பதால், இப்போதைக்கு மக்கள் இதுபற்றி அச்சப்பட வேண்டாமென நிபுணர்கள் கூறுகின்றனர்.