முகநூல் மற்றும் இன்ஸ்டா ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில் ரீல்ஸ் போட்டு லைக்ஸ்களை அள்ளும் பழக்கம், இன்றைய தலைமுறையிடம் அதிகரித்து வருகிறது. அதற்காக, அவர்கள் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், டெல்லி பாஸ்கிம் விஹாரைச் சேர்ந்த மேக்கப் கலைஞரான ஷைஃபாலி நாக்பால் என்பவர் பேய் வேடம்போட்டு நாயிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் பெரும்பாலும், பேய்களுக்கு என ஒரு விழா கொண்டாடப்படுகிறது. அது, ஹாலோவின் திருவிழா என அழைக்கப்படுகிறது. இது அக்டோபர் இறுதியில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி பேய், ஆவிகள் போல வேடமணிந்து அங்குள்ள மக்கள் சாலையில் திரண்டுசெல்வார்கள். இந்தியாவிலும் ஆங்காங்கே இந்த ஹாலோவின் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அக்டோபர் 31ஆம் தேதி ஹாலோவின் நாள் என்றாலும் அக்டோபர் மாதத்தின் கடைசி சில நாட்களில் ஹாலோவின் கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன.
அப்படித்தான் டெல்லி பாஸ்கிம் விஹாரைச் சேர்ந்த மேக்கப் கலைஞரான ஷைஃபாலி நாக்பால் என்பவர், ஹாலோவின் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் பேய் வேடம் அணிந்து தெருக்களில் உலா வந்து ரீல்ஸ் எடுத்துள்ளார். அதாவது, பேய்க்கான உடை அணிந்து, அதற்கேற்ற ரத்த சிவப்பு வண்ண மை பூசி, கண்களில் 'லென்ஸ்' பொருத்திக்கொண்டு பேய் போன்று பயமுறுத்தும் வகையில் ஈடுபட்டுள்ளார் அவர். கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த டெல்லி நகர் சாலையில் உலா வந்து குழந்தைகள், பெண்கள் ஆகியோரைப் பயமுறுத்த முயற்சித்தும் உள்ளார்.
அவரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வந்துள்ளனர். ஆனால் எதிர்பாராவிதமாக, அவரின் இந்தப் பேய் வேடத்தைப் பார்த்ததும் நாய் ஒன்று அவரைத் துரத்த தொடங்கிவிட்டது. இதில் பயந்துபோய் அவர் கத்துகிறார். இது பார்வையாளர்களைச் சிரிக்க வைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
அதேநேரத்தில், இந்த வீடியோவுக்கு எதிராகப் பரவலான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. “குழந்தைகள் முன்பு இதைச் செய்யாதீர்கள்” எனவும், “வீடியோ உருவாக்க வேண்டுமென்றால், சாலையின் நடுவில் உள்ள ஒரு வெறிச்சோடிய இடத்திற்குச் செல்லுங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.