டெல்லியில் மாமனார் மற்றும் மாமியாரைக் கொன்ற மருமகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறியுள்ளன. இந்நிலையில் டெல்லியில் ஒரு கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு டெல்லியைச் சேர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் கவிதா (35) என்ற பெண் தனது மாமியார் மற்றும் மாமனாரைக் கொன்றிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
அவர்களது குடும்பத்தில் சொத்தை பிரிப்பதில் பிரச்னை இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் 58 வயதான மாமியார் ஓம்வதி மற்றும் 61 வயதான மாமனார் ராஜ் சிங்கை கவிதா கழுத்தை நெறித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கத்தியால் குத்தி கொன்றிருக்கிறார் என்றும் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் நடைபெறும் போது அப்பெண்ணின் கணவன் சதீஷ் சிங் (37) வீட்டில் தான் இருந்திருக்கிறார். அத்துடன் கவிதா-சதீஷ் ஆகியோரின் 8 வயது மற்றும் 6 வயது நிரம்பிய 2 பிள்ளைகளும் வீட்டிலிருந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்து சென்ற போலீஸார், வீட்டின் ஒரு படுக்கையறையிலிருந்த ராஜ்சிங் மற்றும் ஓம்வதி ஆகிய இருவரின் உடலையும் கைப்பறறினர். அத்துடன் கொலை செய்ததற்கான காரணம் என்ன ? என்று கவிதாவிடம் விசாரித்து வருகின்றனர். இந்தக் கொலையில் கணவர் சதீஷ் சிங்கிற்கும் தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர்.