டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில், டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, போராடிய விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி நுழைய முயன்ற விவசாயிகளை தடுக்கும் வண்ணம் டெல்லி காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி, தடியடி நடத்தினர். இருந்தபோதினும் முன்னேறி சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு, கோட்டையின் வாசலில் இருந்த கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றினர். போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் படுகாயமடைந்த விவசாயி நவ்நீத்( 45வயது) உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்த உத்தரவானது கூட்டத்தொடர் முடியும் வரை நீடிக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வன்முறை குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.