நாட்டிலேயே கொரோனா வைரசால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்திற்கு வந்துள்ளது.
டெல்லியில் முதல் கொரோனா வைரஸ் தொற்று மார்ச் 2 ஆம் தேதி கண்டறியப்பட்டது. ஆனால் மும்பையில் மார்ச் 11 ஆம் தேதிதான் கண்டறியப்பட்டது. அந்த மாத இறுதிக்குள் மும்பையில் 151 பேரும், டெல்லியில் 97 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மே மாத இறுதி வரை கூட மும்பையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த இருபத்தி மூன்று நாட்களாக கொரோனா பரவல் அங்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தலைநகர் டெல்லியிலோ கடந்த இருபத்தி மூன்று நாட்களாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.
டெல்லியில் நாள் ஒன்றுக்குப் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 598 ஆக உள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கையில் மும்பையே முதலிடத்திலுள்ளது. அங்கு 4000 பேர் உயிரிழந்த நிலையில் டெல்லியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2365 ஆகவே உள்ளது.
டெல்லியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 19 ஆயிரமாக அதிகரித்துள்ளது. பரிசோதனையை அதிகப்படுத்தியதே, அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படக் காரணம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் டெல்லியிலுள்ள உள் விளையாட்டு அரங்குகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.