சீன பிரஜைகளுக்கு சட்டவிரோதமாக விசா பெற்று தர ரூ.50 லட்சம் முறைகேடாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 30ம் தேதி வரை சிவகங்கை தொகுதி மக்களவை எம்பி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
2008-2014ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் சீனர்களுக்கு இந்தியாவில் பணிக்கான விசாவை முறைகேடாக பெற்றுத்தருவதற்கு 50 லட்சம் ரூபாய் சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டு உதவி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 17ஆம் தேதி டெல்லி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் சிபிஐ விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை கைதுசெய்வதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தை கைதுசெய்வதற்கு இடைக்கால தடை விதித்தனர்.
ஏற்கெனவே, சிபிஐ தன்னை கைதுசெய்வதற்கு தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டபோது, சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய முற்பட்டால் மூன்று வேலை நாட்களுக்கு முன்னதாக எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.