கடந்த 58 ஆண்டுகளில் இந்தியாவின் தலைநகரில் அதிக குளிர் பதிவானது இந்த அக்டோபரில்தான் என இந்திய வானிலைத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
1962ஆம் ஆண்டு 16.9 டிகிரி செல்ஷியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது. அதற்குப்பிறகு இந்த ஆண்டு அக்டோபரில்தான் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகி உள்ளது.
பொதுவாக அக்டோபர் மாதங்களில் டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.1 ஆகத்தான் பதிவாகும். ஆனால் வியாழக்கிழமை டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 12.5 டிகிரியாக செல்ஷியஸாக பதிவாகியுள்ளது. 1994க்கு பிறகு அதாவது 26 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது இந்த ஆண்டுதான். 1994ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வெப்பநிலை 12.3 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியிருந்தது. அக்டோபர் 31, 1937தான் இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையிலேயே மிகவும் குறைவானது. அதாவது 9.4 டிகிரி செல்ஷியஸ்தான் அப்போது பதிவாகியிருந்தது.
ஆனால் இந்த ஆண்டின் சாதாரண குறைந்தபட்ச வெப்பநிலை 15-16 டிகிரி செல்ஷியஸ் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது. பொதுவாக பூமியிலிருந்து வெளியேறும் வெப்பக் கதிர்வீச்சுகளை மேகங்கள் தடுத்து தரைக்கே அனுப்புவதால் அவை தரையை வெப்பமாக்குகின்றன. ஆனால் இந்த ஆண்டு அதிக மேகமூட்டம் இல்லாததுதான் இந்த குறைந்தபட்ச வெப்பநிலைக்கு முக்கிய காரணம் என ஐஎம்டியின் தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். மற்றொரு காரணம், மெதுவாக வீசும் காற்று. இது மூடுபனி உருவாக காரணமாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.