டெல்லியில் முதன்முறையாக கொரோனா தொற்றுக்கு போலீசார் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனால் மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதே அவர் உயிரிழப்புக்கு காரணம் என அவருடன் பணியாற்றும் சக காவலர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
32 வயது நிரம்பிய அமித் குமார் என்ற காவலர் டெல்லி பாரத் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வீடு ஹரியானா மாநிலம் சோனிபூரில் இருக்கிறது. இவருக்கு மனைவியும் 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு அமித் குமார் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவருடன் பணியாற்றும் சகப்பணியாளர் ஒருவர் கூறும்போது “ விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றிருந்த அமித் குமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து காய்ச்சல் மாத்திரைகளை உட்கொண்ட அமித் பணிக்காக டெல்லியில் காவலர்கள் தங்கும் விடுதிக்கு வந்தார். அங்கு வந்த பின்னரும் அவருக்கு காய்ச்சல் குணம் ஆகவில்லை என்பதால் அமித் மீண்டும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு பணிக்காக வந்தார். சரியாக காலை 2.30 மணிக்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் என்னிடம் கொஞ்சம் சுடு தண்ணீரும், தேநீரையும் கேட்டார். மிகவும் சோர்ந்துபோன அமித் அங்கேயே படுத்துக்கொண்டார்.
இந்நிலையில் அதிகாலை 7.30 மணிக்கு அவரை ஹைதர் பூரில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு அழைத்துச் சென்றேன். அவர்கள் அமித்துக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்றனர். அப்போது நான் அமித் உடல் நிலை மோசமாக இருப்பதால் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துக் கொள்ளுமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, அமித்தை டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். இதனையடுத்து அமித்தை நான் அங்கு அழைத்து சென்றேன்.
ஆனால் அங்கு ஏற்கெனவே இரண்டு காவல் அதிகாரிகள் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் அமித்தை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் அமித்தை நான் சந்த் பந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு அவர்கள் அமித்திற்கு சில மருந்துகளை கொடுத்தனர். இதனால் அமித் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தார். இதனையடுத்து அமித்தை சிகிச்சைக்காக அனுமதித்துக் கொள்ளுமாறு நான் கேட்ட போது அவர்கள் அமித்தை அனுமதித்துக் கொள்கிறோம்.
ஆனால் அவருக்கு உரித்தான பணிகளை அவரே செய்து கொள்ள வேண்டும் என்று கூறினர். அந்த அந்த சமயம் அமித்தால் பேச கூட முடியவில்லை. அந்த நேரத்தில் அமித்தால் எப்படி வேலைகளை பார்க்க முடியும்..? அதனால் மீண்டும் நாங்கள் தங்கிய இடத்துக்கே அழைத்து வந்தேன். செய்வதறியாது நின்ற நான் சரியாக காலை 8.30 மணிக்கு எங்களின் மூத்த அதிகாரிகளுக்கு போன் செய்து நடந்ததை விவரித்தேன். அதன் பின்னர் செவ்வாய்கிழமை இரவு 8.30 மணிக்கு போன் செய்த காவல் அதிகாரி ஒருவர் என்னை ராம் மனோகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
அவர் கூறிய அடுத்த நொடியே அமித்தை தூக்கிக்குக் கொண்டு மருத்துவனைக்கு புறப்பட்டேன். ஆனால் செல்லும் வழியிலேயே அமித் உயிரிழந்துவிட்டார். மருத்துவமனையில் அவரை சோதனை செய்த மருத்துவர்களும் அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். ஏதாவது ஒரு மருத்துவமனையில் அமித்தை அனுமதித்திருந்தால் அமித் இன்று உயிரோடு இருந்திருப்பார். அவரது மனைவிக்கு நான் என்ன சமாதானம் சொல்வேன். நான் ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு செல்லும் போதெல்லாம் அமித்தின் மனைவிக்கு தகவல் கொடுத்தவாறே சென்றேன்.” என்று கூறினார்.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, அவரின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் காவல்துறை செய்யும் என உறுதியளித்தார் . இதனையடுத்து நேற்று அமித்தின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியிடப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.