திஷா ரவிக்கு ஜாமீன் வழங்க டெல்லி காவல் துறை கடும் எதிர்ப்பு, விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல் கிட் வழக்கில் கைதான இளம் சமூக செயற்பாட்டாளர் திஷா ரவியின் ஜாமீன் மனு மீது செவ்வாய்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் டூல் கிட் என்ற பெயரில் செயல் திட்ட ஆவணத்தை உருவாக்கி அதை சர்வதேச பிரபலங்களுடன் பகிர்ந்ததாக சுற்றுச்ச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார். தேச துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டிருந்த அவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்தவழக்கு விசாரணைக்கு வந்த போது திஷாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக் கூறி வாதிட்ட டெல்லி காவல் துறை, அவர் விவசாயிகள் போராட்டத்தை காரணமாக காட்டி சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாக விளங்கினார் என குற்றஞ்சாட்டியது. தன் செயலுக்கான சட்ட நடவடிக்கைகள் பாயும் என அறிந்துதான் தனது வாட்சாப், மின்னஞ்சல் உள்ளிட்ட பதிவுகளை நீக்கிவி்ட்டார் என்றும் காவல் துறை தெரிவித்தது. இவ்வழக்கில் திஷா ரவி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால் காவல் துறையின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வெடித்த வன்முறைக்கு திஷா சமூக தளங்களில் பகிர்ந்த டூல் கிட் ஆவணங்கள் தான் காரணம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை வழக்கறிஞர் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்புடன் திஷாவுக்கு தொடர்பு இல்லை என்றும் அவர் மறுத்தார். இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து உலகத்திற்கு தெரிவித்தது தேசத் துரோகம் என்றால் அதற்காக தொடர்ந்து சிறையில் இருக்கவும் தயார் என திஷா தெரிவித்துள்ளதாகவும் வழக்கறிஞர் தன் வாதத்தின் போது குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, திஷாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தார்.