உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியர் புகார் அளித்த பெண் மீது தொடரப்பட்டிருந்த மோசடி வழக்கை டெல்லி காவல்துறை முடித்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் பணி புரிந்த பெண் மீது நவீன் குமார் மோசடி புகார் ஒன்று அளித்தார். அந்தப் புகாரில் இந்தப் பெண் உச்சநீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
இதன்பின்னர் மார்ச் மாதம் 10ஆம் தேதி அந்தப் பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து மார்ச் 12ஆம் தேதி அப்பெண்ணிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனினும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்ந்த நவீன் குமார் மீண்டும் ஆஜராகததால் நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். ஏனென்றால் ஏற்கெனவே இரண்டு முறை விசாரணைக்கு நீதிமன்றத்தில் நவீன் குமார் ஆஜராகவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கை முடித்து வைக்கப்போவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், “இந்த வழக்கை தொடர்ந்த நவீன் குமார் வழக்கை தொடர விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஏனென்றால் அவரிடம் பணத்தை வாங்கிய நபர் தற்போது இறந்துவிட்டதால் இந்த வழக்கை நடத்தும் எண்ணம் இல்லை எனக் கூறினார். ஆகவே இந்த வழக்கை நாங்கள் முடித்து வைக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்தப் பெண் தான் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.