டெல்லி வன்முறை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் கைது

டெல்லி வன்முறை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் கைது
டெல்லி வன்முறை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் கைது
Published on

உளவுத் துறை பிரிவு அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் தாஹீர் உசேனை டெல்லி போலீஸார் இன்று கைது செய்தனர்.

டெல்லி கலவர வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தாஹீர் உசேன், தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படி டெல்லி நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் சரணடைய வந்த தாஹீர் உசேனை போலீஸார் கைது செய்தனர்.

டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியான ஜாஃபராபாத்-தில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் சிஏஏ-வுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றபோது, கடந்த வாரம் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கற்கள், கட்டைகளை கொண்டு இருதரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த வன்முறையில் 46 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் உளவுத் துறை அதிகாரியான அங்கித் சர்மாவும் ஒருவர்.

மத்திய உளவுத் துறையில் உதவியாளராக இருந்த அங்கித் சர்மா என்பவரின் உடல் சாக்கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது. பணி முடித்து வீடு திரும்பிய அவர் கொல்லப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா பலமுறை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. அங்கித் சர்மாவின் உடலில் பல சிராய்வுகள், கூர்மையான ஆயுதங்களால் ஆழமான வெட்டு காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் பலமுறை குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் தாஹீர் உசேனுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகித்தனர். மேலும் அவரை தீவிரமாக இவ்வழக்கில் கைது செய்ய தீர்மானித்தனர். இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் சரணடைய வந்த தாஹீர் உசேனை போலீஸார் இன்று கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com