மேற்கு டெல்லியின் பசாய் தாராபூரில் உள்ள குடோன் ஒன்றில் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்கிற போதைப்பொருளை, டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். சத்துமாவுக்குள் மறைத்து வைத்து இந்த போதைப்பொருளை கடத்த முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை அவர்கள் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,500 கிலோ போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், தப்பியோடிய அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மெத்தாபெட்டமைன் என்கிற போதைப்பொருளை தயாரிப்பதற்கான முக்கிய வேதிப்பொருளாக சூடோபெட்ரைன் பயன்படுத்தப்படுகிறது. இந்த போதைப்பொருள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு அதிகளவில் கடத்தப்பட்டுள்ளது.
அங்கு ஒரு கிலோ மெத்தாபெட்டமைன் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் இந்த போதைப்பொருளை பெற்ற கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கையிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் நடிகை கயல் ஆனந்தி நடித்து, வரும் மார்ச் 1-ம் தேதி வெளியாக இருக்கும் 'மங்கை' என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சித்திக் என்பவரே கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவனாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்த போதை பொருள் கடத்தலில் அவர் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
மைதீன் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், சலீம் அரசியல் பிரமுகராக இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மூன்று பேரும் சேர்ந்துதான் சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மூவரும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு சினிமாவில் முதலீடு செய்து உள்ளார்களா? என்னென்ன படத்திற்கு பைனான்ஸ் செய்து உள்ளார்கள்? மற்றும் சொத்துக்களாக எங்கெங்கே என்னென்ன சேர்த்து வைத்திருக்கிறார்கள்? என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபருடன் சினிமாவைச் சேர்ந்த மற்ற நபர்கள் யார் யாரெல்லாம் தொடர்பு இருக்கிறது? இங்குள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பு என்னென்ன? என்பது குறித்தும் சைபர் கிரைம் தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன் செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஹவாலா மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத்துறையினரும் விசாரணையை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.