தலைநகர் டெல்லியில் உள்ள ‘நியூஸ் கிளிக்’ செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், தொடர்புடைய நபர்களின் வீடுகளில் டெல்லி போலீசார் நேற்று (அக்.3) அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் சோதனை நடைபெற்றது. இறுதியில், டெல்லி போலீசார் சோதனை நடத்தி அவர்களின் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப்டாப், செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் எடுத்துச் சென்றனர். இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இறுதியில், நியூஸ் கிளிக் பத்திரிகை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக 46 நபர்களை, விசாரித்த டெல்லி போலீசார், நியூஸ் கிளிக் நிறுவனரும் ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஏழு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பான விசாரணை, இன்றும் நடைபெற்று வருகிறது.
இதன் விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர்களிடம், அதாவது அந்த நிறுவனத்தில் பணியாற்றும், 9 பெண்கள் உட்பட 46 பேரிடம் புதுடில்லி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, விவசாயிகள் போராட்டம் மற்றும் டெல்லி ஷாகின்பாக் கலவரம் பற்றி ஏதும் செய்தி வெளியிட்டுள்ளீர்களா எனவும் டெல்லி போலீசார் விசாரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் வங்கிக் கணக்குகளையும் அவர்களுடைய தனிப்பட்ட உடைமைகளையும் சோதனையிட்டதாகவும் சொல்லப்படுகிறது. வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த கேள்விகளும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
பத்திரிகையாளர்களின் வீடுகளில் டெல்லி போலீசார் திடீர் சோதனையால், அங்குள்ள ஊடகத்தினர் பலரும் அச்சத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ’இனிமேல் பத்திரிகை தொழிலைச் சார்ந்து இருக்கக்கூடாது; வேறு வேலைக்குச் செல்ல வேண்டும்’ என அவர்கள் கவலை தெரிவித்திருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ’போலீசார் எந்த நேரத்திலும் தம் வீடுகளுக்கு சோதனை நடத்த வரலாம்’ என அச்சத்துடன் இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நியூஸ் கிளிக் தன்னுடைய தளத்தில், அறிவிப்பு ஒன்றைப் பதிவு செய்துள்ளது. அதில், ’தம்முடைய செய்தி நிறுவனம், ஒரு சுதந்திரமானது எனவும், உயர்ந்த தரத்தை உள்ளடக்கியது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அது, சீன நிறுவனத்தின் எந்த செய்திகளையும் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ வெளியிடவில்லை. சீனா பற்றிய செய்திகளை விளம்பரப்படுத்தவில்லை. நியூஸ் கிளிக் மூலம் பெறப்படும் அனைத்து வங்கி நிதிகளும் சட்டப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை மற்றும் வழக்கு குறித்து நியூஸ் கிளிக் நிறுவனம், ’நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பத்திரிகை சுதந்திரத்திற்காகவும், தங்களது வாழ்வுக்காகவும் போராடுவோம் என தெரிவித்துள்ளது. தவிர, டெல்லி காவல் துறை சிறப்புப் பிரிவின் விசாரணையின்போது எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவையாக உள்ளது எனவும் அது தெரிவித்துள்ளது. மேலும், கடந்த காலங்களில் தாம் வெளியிட்டுள்ள செய்திகள் அனைத்தும் இணையத்தில் அனைவரும் காணக் கிடைக்கும் வகையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.