டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையின் 2ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இவ்வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், டெல்லி கல்வித் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி, ”தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் அதிஷி, “பாஜகவில் சேராவிட்டால் நீங்கள் உள்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் விரைவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவீர்கள் என எனக்கு மிரட்டல் வந்தது” என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
து நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதுகுறித்து பதிலளித்த அதிஷி, “பாஜக புகார் அளித்த 12 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா என்பதுதான் எனது கேள்வி. அனைத்து மத்திய புலனாய்வு அமைப்புகளும் பாஜகவிடம் அடிபணிந்துவிட்டன என்பது கவலை அளிக்கிறது. தற்போது இந்த பட்டியலில் தேர்தல் ஆணையமும் இணைந்துள்ளது.
மத்திய அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து வருகின்றன, ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பண மோசடி வழக்குகளில் பாஜக தலைவர்கள் மீது அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மத்திய அமைப்புகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதை விட்டுவிட்டு பாஜக, தேர்தலில் ஆம் ஆத்மியை எதிர்த்துப் போராட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.