உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. எனினும், அவற்றுக்கு எதிராக தண்டனைகள் வழங்கப்படுவதுடன் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. ஆனாலும் குற்றங்கள் ஒருபோதும் குறைந்தபாடில்லை.
அந்த வகையில், கடந்த மாத தொடக்கத்தில் பெங்களூருவில் உள்ள பிரபல காபி ஷாப் ஒன்றின் கழிப்பறையில், குப்பைத்தொட்டியில் ஸ்மார்ட் போன் மூலம் ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, அதே மாத இறுதியில் ஆந்திராவில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் பெண்கள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், டெல்லியில், சிவில் சர்வீசஸ் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில் வாடகை வீட்டில் தங்கிப் படித்த மாணவியின் கழிவறை மற்றும் படுக்கையறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் ஒருவர், சிவில் சர்வீசஸ் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில் டெல்லியின் ஷகர்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிப் படித்து வந்தார். இந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளரின் மகனான கரண் (30) என்பவர், அந்த மாணவி தங்கியிருந்த வீட்டில் ஸ்பை கேமராக்களைப் பொருத்தி, அவரது தனிப்பட்ட வீடியோக்களைப் பார்த்துள்ளார். இந்த சூழலில் தன்னுடைய வாட்ஸ் அப் கணக்கை வைத்து வேறொருவர், அதைக் கண்காணிப்பது அவருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் தனது அறையில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்.
இதையும் படிக்க:
அப்போது குளியல் அறை பல்பில் ஸ்பை கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்துபோய் போலீஸில் புகார் அளித்துள்ளார். அவர்கள் வந்து மேலும் சோதனையிட்டதில், அவருடைய படுக்கையறை பல்பிலும் ஸ்பை கேமரா பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணையின்போது, ஊருக்குச் சென்றபோது இந்த அறை சாவியை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்துவிட்டுச் சென்றதாக அந்த மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாக பயன்படுத்திக் கொண்ட வீட்டு உரிமையாளரின் மகனான கரண், எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் பொதுவாகக் கிடைக்கும் ஸ்பை கேமராக்களை வாங்கி அவரது அறைகளில் பொருத்தியுள்ளார்.
அதேநேரத்தில், இந்த கேமராக்களை ஆன்லைனில் இயக்க முடியாது. ஆனால், அதில் பதிவாகும் காட்சிகள் மெமரி கார்டுகளில் சேமிக்கப்படும். இதனால், அந்த மாணவியின் அறையில் மின் பழுது இருப்பதாகக் கூறி, கரண் பலமுறை அவரிடம் அந்த அறை சாவியைக் கேட்டு பதிவுசெய்த வீடியோக்களை தனது லேப்டாப்பிற்கு மாற்றியுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், கரணிடம் இருந்து பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களை சேமிக்கப் பயன்படுத்திய ஸ்பை கேமரா ஒன்றும், இரண்டு லேப்டாப்களும் கைப்பற்றப்பட்டன. மாற்றுத்திறனாளியான குற்றஞ்சாட்டப்பட்ட கரண், இப்போது பாரதிய நியாய சன்ஹிதாவின்கீழ் வோயூரிசம் வழக்கை எதிர்கொள்கிறார். இந்தச் சட்டத்தின்கீழ், அவருக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.