டெல்லியில் பத்திரிகையாளர்கள் வீடுகளில் திடீர் ரெய்டு! லேப்டாப், செல்போன்கள் பறிமுதல்! நடந்தது என்ன?

தலைநகர் டெல்லியில் பத்திரிகையாளர் வீடுகளில் டெல்லி போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
delhi raid
delhi raidtwitter
Published on

டெல்லி பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை

தலைநகர் டெல்லியில் உள்ள ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், தொடர்புடைய நபர்களின் வீடுகளில் டெல்லி போலீசார் இன்று (அக்.3) அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அபிசார் சர்மா, பாஷா சிங், ஊர்மிளேஷ், பிரபீர் புர்கயஸ்தா, கீதா ஹரிஹரன், அவுனிந்தியோ சக்ரவர்த்தி, சோஹைல் ஹஷ்மி, நையாண்டி உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

delhi raid
delhi raidpti

சோதனை நடத்த காரணம் என்ன?

சீனாவிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக அவர்கள்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAFA)ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் வீடுகளில் நடைபெறும் சோதனை குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், "நான் இதனை நியாயப்படுத்த வேண்டியதில்லை. யாராவது தவறு செய்திருந்தால், விதிமுறைகளின்படி விசாரணை நடத்த விசாரணை நிறுவனங்களுக்கு சுதந்திரம் உண்டு" என்று தெரிவித்துள்ளார்.

delhi raid
டெல்லியில் ஊடக நிறுவனத்தில் சோதனை: “கருத்து சுதந்திரம் தொடர்பானதல்ல” - காவல்துறை விளக்கம்!

சோதனை நடத்தியது குறித்து பத்திரிகையாளர்களின் கருத்து!

சோதனை குறித்து பத்திரிகையாளர் அபிசர் சர்மா, "என் வீட்டுக்கு வந்து இறங்கிய டெல்லி போலீஸார், என்னுடைய லேப்டாப் மற்றும் செல்போனை எடுத்துச் சென்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பத்திரிகையாளரான பாஷா சிங், "எனது போனில் இருந்து வரும் கடைசி ட்வீட் இது. டெல்லி போலீஸார் என்னுடைய போனை பறிமுதல் செய்துவிட்டனர்" என்று பதிவிட்டுள்ளார். இந்தச் சோதனை குறித்து ‘தி பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா’வும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த சோதனைக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்,"ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்கள் எப்போது அரசின் முதல் எதிரிகளாக மாறினார்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

’’மோடி அரசுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும்"

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், "டெல்லியில் நடைபெறும் ரெய்டுகளின் மூலம் ஊடகங்களின் குரல்வளையை ஒடுக்க மோடி நினைக்கிறார். இது முழுக்க முழுக்க சட்ட விரோதமானது; ஜனநாயகத்திற்கு எதிரானது. மோடி அரசுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.

’’இந்தச் சம்பவம் வரலாற்றில் நிச்சயம் எழுதப்படும்’’

ராஷ்ட்ரீய ஜனாத தளம் கட்சியின் எம்.பி. மனோஜ் ஜா, “இந்த சோதனை மிகவும் துரதிஷ்டவசமானது. இதன்மூலமாக அவர்கள் எதைக் காட்ட முயல்கிறார்கள். இந்தச் சம்பவம் வரலாற்றில் நிச்சயம் எழுதப்படும். இந்த நடவடிக்கைக்கான பலனை அரசு அனுபவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

’’அவர்கள் வழக்கமாக கையிலெடுக்கும் ஆயுதமே திசை திருப்புதல்தான்’’

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறுகையில், “நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலுத்திருக்கும் கோரிக்கையில் இருந்து இது, திசைத் திருப்பும் வேலை. எப்போதெல்லாம் (பாஜக) அவர்கள் சிக்கலான விஷயங்களை சந்திக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் வழக்கமாக கையிலெடுக்கும் ஆயுதமே திசை திருப்புதல்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

delhi raid
பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு: விவரங்களை வெளியிட்டது மாநில அரசு!

’’புதிய இந்தியா பத்திரிகையாளர்களை மிகவும் தீவிரமாக பார்க்கிறது’’

திரிணமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா , "மூத்த பத்திரிகையாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று, அவர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதிய இந்தியா பத்திரிகையாளர்களை மிகவும் தீவிரமாக பார்க்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ’இது ஊடகங்களை மூடிமறைக்கும் முயற்சியாக இருந்தால் இதன் பின்னணியில் இருக்கும் காரணத்தை நாடு அறியவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

நியூஸ் கிளிக் நிறுவனமும்... கடந்த கால சோதனைகளும்!

நியூஸ்கிளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்பட்டுவந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை, அந்நிறுவனத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சோதனை நடத்தியது. அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்புக் கோரி நியூஸ் கிளிக் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்நிறுவன ஆசிரியர்கள் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி உயர்நீதிமன்றம்

இதனால், கடந்த 2 ஆண்டுகளாக நியூஸ்கிளிக் விவகாரத்தில் அமலாக்கத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆங்கில பத்திரிகை ஒன்றிலிருந்து ‘நியூஸ்கிளிக்’ நிறுவனத்துக்கு சீனாவிடமிருந்து நிதி வருகிறது என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை ‘நியூஸ்கிளிக்’ நிறுவனம் மீதான தனது விசாரணையை தீவிரப்படுத்தியது. மேலும், நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக் கோரி அமலாக்கத் துறை, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இதையும் படிக்க: AsianGames2023: சதமடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால்... அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கு சீல் வைத்த காவல்துறை!

அமலாக்கத் துறையின் மனு தொடர்பாக பதிலளிக்கக் கோரி நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கும், அதன் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான பிரபீர் புர்கயாஷ்தாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

இந்தச் சூழலில் அமலாக்கத் துறை தகவல்களின் அடிப்படையில் டெல்லி போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆங்கில ஊடகம் குறித்த கட்டுரையை வைத்தும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கருத்து தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிலவரப்படி, சில பத்திரிகையாளர்கள் லோதி ரோடு சிறப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியுஸ் கிளிக் பத்திரிகை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com