தேசியப் பங்குச் சந்தை ஊழியர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரத்தில் அதன் முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்.
2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணனை, தேசியப் பங்குச் சந்தையின் ரகசியத் தகவல்களை முன்கூட்டியே பங்கு நிறுவனங்களின் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் 'கோ-லொக்கேஷன்' ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்து விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகள். இவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் ஜாமீன் கோரி சித்ரா ராமகிருஷ்ணன் தரப்பில் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான வழக்கில் கடந்த மே மாதம் உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனைனா சர்மா, சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார். இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் இன்று உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர்நீதிமன்றம், சிபிஐ தொடர்ந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கியது. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் (NSE) முன்னாள் குழு தலைமை செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியமுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: 'ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை பாதிப்பதில்லை’ - அமைச்சர் சிவசங்கர்