உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹாலை கட்டியது யார் என்றும், அதன் உண்மையான வரலாற்றை கண்டறிய வேண்டும் எனவும் இந்து சேனா அமைப்பின் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்து சேனா தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் தாக்கல் செய்த மனுவில், 'முகலாய பேரரசர் ஷாஜகானால் தாஜ்மஹால் கட்டப்படவில்லை என்றும் ராஜா மான்சிங் என்பவர்தான் தாஜ்மஹாலை கட்டினார். ராஜா மான்சிங் அரண்மனையாக இருந்த தாஜ்மஹால், ஷாஜஹானால் புதுப்பிக்கப்பட்டது.
அதன்பிறகு அது அவரது மனைவியின் கல்லறையாக மாற்றப்பட்டது. எனவே, தாஜ்மஹால் தொடர்பான தவறான தகவல்களை வரலாற்றைப் புத்தகங்களில் இருந்து அகற்ற தொல்லியல் துறை மற்றும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும் தாஜ்மஹாலின் வயது, ராஜா மான்சிங் அரண்மனை கட்டப்பட்ட ஆண்டு குறித்து ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடவேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: அமெரிக்கா: ஆன்லைனில் மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு சிறுநீர் டெலிவரி!
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திரசர்மா, துசார் ரான் கெடலோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது தாஜ்மஹாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய பரிசீலனை செய்துள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தெரிவித்தது. தொடர்ந்து நீதிபதிகள் தாஜ்மஹாலின் உண்மையான வரலாறு குறித்து ஆய்வு நடத்தும்படி மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் ராஜா மான்சிங் அரண்மனையை சீரமைத்து ஷாஜஹான் பயன்படுத்தினாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர்.
முன்னதாக, தாஜ்மஹாலை ஷாஜகான்தான் கட்டினாரா என்பதை உறுதிப்படுத்தக்கோரி, இதே இந்து சேனா தலைவர் சுர்ஜித் சிங் யாதவ், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு.. 21 பேர் காயம்!
அதில், ’17ஆம் நூற்றாண்டில் ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டியதாக நாம் பள்ளி பாடப்புத்தகங்களில் கற்பிக்கிறோம். ஆனால், நாம் கற்பிப்பது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டுவதற்கு முன், அங்கு அதுபோன்ற கட்டடம் இருந்ததா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அந்தக் கட்டடத்தின் உண்மையான வயதையும், வரலாற்றையும் உறுதிப்படுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ”அனைத்திற்கும் நீதிமன்றத்தை இழுக்காதீர்கள். 400 வருடங்களுக்கு முந்தைய அந்தக் கட்டடத்தின் உண்மையான வயதையும் வரலாற்றையும் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்த முடியுமா? நீங்கள் உங்கள் மனுவில், ’தவறான தகவல்களை களையுங்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எது உண்மையான தகவல் என்பதை யார் உறுதிப்படுத்துவது? யார் தீர்மானிப்பது? இதுதான் நீதிமன்றத்தின் வேலையா?" என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.
இதையும் படிக்க: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் கருத்தை ஏற்பதாகவும், மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், மனுதாரர் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை அணுகுவார் என்றும் அவர் கூறினார். இதையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இதற்கிடையே தற்போது மீண்டும் இதே கோரிக்கையை முன்வைத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுர்ஜித் சிங் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கட்டடம் தாஜ்மஹால். 42 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கட்டடம், உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டடம், காதலின் சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது. முகலாய மன்னரான ஷாஜகான், இறந்துபோன தனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மஹாலை கட்டினார் என வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு.. தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி