டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத் துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி கீழமை நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுக்கள் தள்ளுப்படி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இவ்வழக்கில் அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன்1 ஆம்தேதிவரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தவிர, அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடலாம் எனவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த மே 10ஆம் தேதி சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டார். பின்னர், அவரது பிணை நிறைவடைந்த சூழலில், அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் கடந்த ஜூன் 2ஆம் தேதி திகார் சிறைக்கு திரும்பினார்.
இதற்கிடையே அவரது நீதிமன்றக் காவல் ஜூன் 19 முடிவடைந்தது. இதையடுத்து, விசாரணை நீதிமன்றம் அவரது வரது நீதிமன்றக் காவலை ஜூலை 3-ஆம் தேதி வரை நீடித்திருந்தது. மருத்துவப் பரிசோதனைக்காக இடைக்கால ஜாமீனை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்த நிலையில், உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. எனினும், ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜூன் 20 அன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் ஜூன் 21 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இடைக்கால ஜாமீனை எதிர்த்து அமலாக்கத் துறை, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கியதை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை, பிணை வழங்கி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதையும் படிக்க: FactCheck|முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்? வைரலாகும் புகைப்படங்கள்.. உண்மை என்ன?
விசாரணை நீதிமன்ற உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்ததையடுத்து ஆத் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சஞ்சய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”விசாரணை நீதிமன்றத்தில் உத்தரவு வரவில்லை, உத்தரவின் நகல்கூட வரவில்லை, ஆனால் மோடியின் அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தை அடைந்தது. இந்த நாட்டில் என்ன நடக்கிறது? முழு நாடும் உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.