டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டண விலக்களிக்க டெல்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி உள்ளது. இதனால் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிர்ந்து போய் உள்ளது. இதனைப் பயன்படுத்தி டெல்லி மாநில அரசையும் கைப்பற்ற பாஜக வியூகம் அமைத்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த முறையும் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் கெஜ்ரிவால் அரசு பல்வேறு வியூகங்களை செயல்படுத்த உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருசில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி பல சலுகைகளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பெண் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை கெஜ்ரிவால் அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக யூனியன் பிரதேசமான டெல்லியில், மெட்ரோ ரயில் மற்றும் டெல்லி மாநகர பேருந்திலும் இனி பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான செலவினங்கள் மற்றும் வருவாய் இழப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர ஆளும் ஆம் ஆத்மி கட்சி வாக்காளர்களைக் கவர பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது.