டெல்லி மெட்ரோவில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் தொடர்பாக எந்த ஒரு பரிந்துரையையும் டெல்லி அரசு வழங்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டண விலக்களிக்க டெல்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பினராலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் டெல்லி மெட்ரோவில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் எதையும் முன்னெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக டெல்லி அரசு இதுவரை எந்த ஒரு பரிந்துரையையும் தங்களிடம் கொடுக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டெல்லி மெட்ரோவில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் தங்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என ஆம் ஆத்மி கட்சி நம்பிக் கொண்டிருந்தது. ஆனால் டெல்லி அரசு இதுவரை இத்திட்டம் தொடர்பாக எந்தவித பரிந்துரையையும் செய்யாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.