கொரோனா பரவலால் தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவாரம் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட டெல்லி மாநகரில் பாதிப்பு விகிதமும் இறப்பு விகிதமும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்ததால் அங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் டெல்லியில் ஒவ்வொரு வாரமாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட மூன்று முறை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பரவல் அங்கு குறைந்துவருகிறது. இந்நிலையில் பொதுமுடக்கம் மேலும் ஒருவாரத்திற்கு அதிகரிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அதன்படி நாளையுடன் பொதுமுடக்கம் முடியவிருந்த நிலையில், வரும் 24ஆம் தேதி காலை 5 மணிவரை நீட்டிக்கப்படுவதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்த பொதுமுடக்கக் காலத்தில் ஆக்சிஜன் வசதிகள் மற்றும் படுக்கை வசதிகளை மேம்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டிருக்கிறது எனவும், டெல்லியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ரிஷ்கா ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றோருக்கு உதவித்தொகை ரூ.5000 உட்பட பல அம்சங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.