டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து, வருகின்ற பிப்ரவரி 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 8 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதோடு, 63 இடங்களில் டெபாசிட் இழந்தது.
இந்நிலையில், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக வருகின்ற பிப்ரவரி 16 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
இதனிடையே, டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க அவர் உரிமை கோருவார் எனத் தெரிகிறது. மேலும், சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை கெஜ்ரிவால் இன்று சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.