நாட்டின் தலைமையகமான டெல்லிக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் அனைத்து கட்சிகள் சார்பிலும் பல கோடீஸ்வரர்கள் போட்டியிட உள்ளது தெரிய வந்துள்ளது. 164 கோடீஸ்வரர்கள் டெல்லி தேர்தலில் களம் காண்கின்றனர். அதில் சொத்து மதிப்பில் முதல் நான்கு இடத்தை பிடித்துள்ள அனைவருமே ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். மேலும் 13 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ.50 கோடியை தாண்டுகிறது.
டெல்லியின் பணக்கார வேட்பாளராக உள்ள ஆம் ஆத்மியின் தரம்பாலின் சொத்து மதிப்பு ரூ.292.1 கோடி. அடுத்த இடத்தில் உள்ள பர்மிலா தோகஸ் சுமார் 81 கோடி ரூபாய் சொத்துகளை வைத்துள்ளார். இவர் தற்போது பதவியில் உள்ள, போட்டியிடும் எம்.எல்.ஏ.க்களில் அதிக சொத்துகளை வைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு அடுத்து ஆம் ஆத்மியின் பதர்பூர் வேட்பாளர் ராம் சிங் 80 கோடி சொத்துகளோடு மூன்றாம் இடத்தில் உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து பின்னர் ஆம் ஆத்மியில் இணைந்தவர். ரூ.76 கோடி சொத்துகளோடு ராஜ்குமார் ஆனந்த் நான்காவது பணக்கார வேட்பாளராக இருக்கிறார். 50 கோடிக்கு அதிகமான சொத்து வைத்திருப்பவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நான்கு வேட்பாளர்களும், பாஜகவை சேர்ந்த 3 வேட்பாளர்களும் உள்ளனர்.
கோடீஸ்வரர்கள் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ள கட்சிகள் சில ஆயிரம் மதிப்புள்ள சொத்து வைத்துள்ளோருக்கும் கூட வாய்ப்பு கொடுத்துள்ளன. டெல்லி வேட்பாளர்களில் வெறும் ரூ55 ஆயிரம் மட்டுமே சொத்து வைத்துள்ள ராக்கி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். பாஜகவை சேர்ந்த ராஜ்குமார் 56 ஆயிரம் சொத்து வைத்திருக்கிறார். ஆம் ஆத்மியின் ராகி பிட்லான் மொத்த சொத்து மதிப்பு ரூ.76 ஆயிரம் மட்டுமே.