அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் டெல்லி சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெறும் நிலையில், பரப்புரையின்போது முன்வைக்கப்பட்ட பிரச்னைகள் குறித்து பார்க்கலாம்.
யூனியன் பிரதசேமாக இருந்த டெல்லி, 1991 ஆம் ஆண்டு சட்டப்பேரவையுடன் கூடிய மாநிலமானது. மாநில அரசாக இருந்தாலும், காவல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் மத்திய அரசின் கீழே உள்ளன. இந்திய நாட்டின் தலைநகர் புது டெல்லியை உள்ளடக்கிய டெல்லி மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றுவது என்பது அரசியல் கட்சிகளின் கவுர பிரச்னையாக இருந்து வருகிறது.
டெல்லி மாநில அந்தஸ்து பெற்றது முதல் ஒரு முறை மட்டுமே பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அதேநேரத்தில் ஷிலா தீக்ஷித் தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3 முறை ஆட்சியைப் பிடித்தது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது உருவான ஆம் ஆத்மி 2013 ஆம் ஆண்டில் ஆட்சியை பிடித்தது. 48 நாட்களில் ராஜினாமா செய்த அவர் 2015 தேர்தலில் அசுர பலத்துடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார்.
தற்போது டெல்லி பேரவைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மக்களவைத் தேர்தலின் போது, டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்றிய பாஜக, பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் டெல்லியில் தீவிரமாக நடைபெறும் நிலையில், அதற்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என நம்பும் பாஜக, அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் மத்திய அரசின் முடிவும் தங்களுக்கு சாதமாக இருக்கும் என நம்புகிறது.
அதேநேரத்தில் அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம், தண்ணீர் மற்றும் மின் கட்டணம் குறைப்பு ஆகிய திட்டங்கள் தங்களை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்தும் என ஆம் ஆத்மி நம்புகிறது. தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி இருந்தாலும், ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
450 ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசுப் பள்ளிகளில் 20 ஆயிரம் புதிய வகுப்பறைகளும் கட்டப்பட்டதாக ஆம் ஆத்மி கூறிய நிலையில், பல பள்ளிகளின் கட்டடங்கள் மோசமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டது பாஜக. எனினும் அவை போலி வீடியோக்கள் என்றும், அதை பகிர்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா பரப்புரை செய்ய தடைவிதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தது.
இதேபோல, டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டமும், டெல்லி தேர்தல் பரப்புரையில் பேசுபொருளாக இருந்தது. இந்த போராட்டம் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டு திட்டமே என அமித் ஷா கூறியிருந்தார். அதேபோல போராட்டக் களத்தில் துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் ஆம் ஆத்மியை சேர்ந்தவர் என்ற புகாரும் எழுந்தது. எனினும் இதை சம்பந்தப்பட்ட இளைஞரின் தந்தையும், ஆம் ஆத்மி கட்சியும் கடுமையாக மறுத்தன.
அனல் பறக்க நடைபெற்ற தேர்தல் பரப்புரை முடிந்து தேர்தல் நாளை தேர்தல் நடைபெறும் நிலையில் தலைநகர் யாருக்கு என்பது செவ்வாய்க்கிழமை தெரிந்துவிடும்.