டில்லியில் உள்ள அரசு மருத்துவமனையில், தலையில் ஏற்பட்ட காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்ட சம்பவம் பெயர் குழப்பத்தால் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
டில்லியில், சாலை விபத்துகளில் காயமடைவோருக்கு மாநில அரசு சார்பில், சுஷ்ருதா ட்ராமா மையம் என்ற மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த விபத்தில், விஜேந்திர தியாகி என்பவருக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே வார்டில் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற வீரேந்திரா என்பவர் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட வேண்டும். நேராக வந்த டாக்டர், வீரேந்திராவுக்குப் பதிலாக விஜேந்திராவுக்கு ஆபரேஷனைத் தொடங்கினார். காலில் துளையிட்டு ஊசி ஒன்றை சொருகி ஆபரேஷனை செய்து முடித்திருக்கிறார். விஜேந்திராவுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்ததால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
இதுபற்றி அறிந்த தியாகியின் மகன், அங்கித், மருத்துவ கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். பின்னர் மீண்டும் அந்த நபருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டது. பெயர் குழப்பத்தால் சிகிச்சை மாறியிருக்கிறது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அஜய் பால் கூறும்போது, ‘ பேஷன் ட்டுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தது. அவர் காலில் துளையிட்டு ஊசியை செலுத்தியதை அவரால் உணர முடிந்தது. ஆனால், எதுவும் சொல்ல முடியவில்லை. கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர் மாற்றப்பட்டிருக்கிறார். இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது. அந்த டாக்டர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்’ என்றார்.
தியாகியின் மகன் அங்கித் கூறும்போது, ’எனது தந்தைக்கு இன்னும் காயம் உள்ளது. காலில் சிகிச்சை செய்துவிட்டதால் அவரால் இப்போது நடக்கவும் முடியவில்லை’ என்றார்.
டாக்டர்களை கிண்டலடித்து காமெடி துணுக்குகள் வருவது வழக்கம். அதை உண்மையாக்கி இருக்கிறார் இந்த டாக்டர்.