மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். 8 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின் மணிஷை சிபிஐ கைது செய்துள்ளது.
டெல்லி அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. 3 மாதங்களுக்கு முன்பாக இதுகுறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதமும் சோதனை நடைபெற்ற நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், டெல்லியின் நிதி அமைச்சராக நிதிநிலை அறிக்கை தயாரித்து வருவதால், விசாரணைக்கு ஆஜராக ஒரு வாரம் அவகாசம் கேட்டிருந்தார் மணீஷ் சிசோடியா. முன்னதாக, இதனை ஏற்றுக்கொண்ட மணீஷ் சிசோடியா, ”நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பேன்” என அறிவித்தார். அதேநேரத்தில், அவரை கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மிகட்சியினர் குற்றம்சாட்டினர். என்றாலும் அவர் சொன்னபடி, டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து தொண்டர்கள் புடைசூழ, சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக மணிஷ் சிசோடியா கிளம்பிச் சென்றார். அதை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ, அவரிடம் இன்று விசாரணை மேற்கொண்டது. மணீஷ் சிசோடியா நேரில் ஆஜராவதை முன்னிட்டு சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அவரது வீடு முன்பும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிபிஐ போலீசாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை சிபிஐ விசாரணையில் ஆஜராவதற்கு முன்பாக பேசிய மணீஷ், ”நான் கடினமான உழைப்பாளி. எனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆம் ஆத்மி வளர்ந்து வருவதை கண்டு பாஜ. பயப்படுகிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை கண்டு அஞ்சவில்லை. என் மீது பொய் குற்றச்சட்டு கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
- ஜெ.பிரகாஷ்