பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் அதுல் குமார் சிங். இவர், பி.எச்.டி. பட்டத்துக்காக ‘பொருளாதார மாற்றத்தில் மாநிலத்தின் பங்கு: சக காலத்திய பீகார்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதி இருந்தார். அது 2009-ம் ஆண்டு ‘பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.
இதன் திருத்திய பதிப்புபோல ஒரு புத்தகத்தை பாட்னாவில் உள்ள ஆசிய வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் உறுப்பினர் செயலாளர் ஷாய்பால் குப்தா வெளியிட்டார். அதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒப்புதல் அளித்து எழுதி உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதுல் குமார் சிங், நிதிஷ் குமார் உள்ளிட்டவர்களை எதிர்மனுதாரர்களாக கொண்டு டெல்லி உயர்நீதிமன்ற பதிப்புரிமை மீறல் வழக்கு போட்டுள்ளார். இந்த புத்தகத்தில் தனக்கு நேரடி தொடர்பு இல்லை என்பதால் தன் பெயரை எதிர் மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் முறையிட்டார்.
ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் நிதிஷுக்கு எதிராக அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், “நிதிஷ் குமார், தற்போதைய இடைக்கால விண்ணப்பம் மூலம் சட்ட நடைமுறைகளை தவறாக பயன்படுத்துகிறார் என கூறி அபராத தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.