- சண்முகப் பிரியா
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், தான் பதவிவகித்த 2012-2022 வரையிலான பத்து ஆண்டுகளில் ஒரு சிறுமி உட்பட 10-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தாகக் கூறி மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி 2023 டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை அமைப்பதாக அறிவித்தார். அதையடுத்து அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மல்யுத்த வீராங்கனைகளும் தங்களின் மூன்றுநாள் தொடர்போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர்.
அந்த நிலையில், மேரிகோம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு விரிவான விசாரணை நடத்தி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் விசாரணை அறிக்கையும் சமர்ப்பித்தது. 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனை ஒருவர் உட்பட 7 வீரங்கனைகள் பிரிஜ் பூஷன் சரன் சிங்கிற்கு எதிராக புகார் அளித்திருந்தனர்.
ஆனாலும் ஏப்ரல் மாதம் வரை பிரிஜ் பூஷன் சரன் சிங் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி ஏப்ரல் மாதம் மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா உள்பட ஏராளமானவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.
காவல்துறை வழக்குப் பதிவு செய்யாதது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மல்யுத்த வீராங்கனைகள் சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு 28-04-2023 அன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், `இந்த வழக்கில் ஏன் எஃப்.ஐ.ஆர்கூட பதிவுசெய்யப்படவில்லை' எனக் கேள்வியெழுப்பியதோடு, உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய வேண்டும்.’ என காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
அதற்குப் பதிலளித்த டெல்லி காவல்துறை தரப்பு, `இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர்மீது வழக்கு பதிவுசெய்யப்படும்' என உறுதி அளித்தது. இந்த நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின்கீழ் இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தனர். ஆனாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
மல்யுத்த சம்மேளன தலைவர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்படவில்லை. எனவே அவரைக் கைதுசெய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்!' எனக் கோரி பலமாதங்களாக இந்திய மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். புதிய நாடாளுமன்றம் கட்டிட திறப்பு விழாவின்போது நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற வீரர், வீராங்கனைகளை போலீசார் தடுத்து நிறுத்தி குண்டுக்கட்டாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.
நாட்டிற்காக விளையாடும் வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டத்தை தீவிரப்படுத்திய மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை எனக்கூறி பதக்கங்களை கங்கையில் வீசுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும் விவசாய சங்க தலைவர்கள் அறிவுறுத்தலால் இந்த போராட்டத்தை அவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டனர்.
தொடர்ந்து 5 மாதங்களாக மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்ததையடுத்து கடந்த ஜூன் மாதம் முதல்வாரத்தில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர்,போராட்டக்காரர்களை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஜூன் 15ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இதற்கு மத்தியில் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி போலீசார் ஜூன் 16 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சுமார் 1,500 பக்கங்களை கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் பாலியல் குற்றச்சாட்டு சார்ந்த பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. 6 வீராங்கனைகளின் விரிவான வாக்குமூலம், சாட்சிகளின் வாக்குமூலங்களும் அடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதேபோல், மல்யுத்த சம்மேளனத்திற்கு ஜூலை 11 ஆம் தேதி தேர்தல் நடத்தவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நிலையில், சாலைகளில் நடத்தி வந்த போராட்டத்தை கைவிடுவதாகவும் இனி நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடைபெறும் எனவும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வினேஷ் போகத், ஷாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கள் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. எனவே, ”நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். ஆனால் வீதிகளில் அல்ல... நீதிமன்றத்தில்" என்று பதிவிட்டிருந்தனர். போராட்டம் கைவிடப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இந்நிலையில், ஆறு முறை எம்.பியான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு பாஜக மீண்டும் சீட் வழங்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவருக்கு பதிலாக அவரது மகனுக்கு சீட் வழங்கியுள்ளது பாஜக தலைமை. பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார்கள் நாட்டையே அதிர வைத்த சூழலிலும் அவரது மகனை வேட்பாளராக தேர்வு செய்துள்ளது பாஜக.
இச்சுழலில் நேற்றைய தினம் மீண்டும் வழக்கு விசாரனைக்கு வந்த நிலையில், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் "மல்யுத்த வீராங்கனைகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் அளவுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளது. எனவே, பிரிஜ் பூஷன் சிங் மீது ஐபிசி பிரிவுகள் 354, 354-ஏ, 506 ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். 6-வது நபரின் புகாரில் இருந்து பிரிஜ் பூஷன் சிங் விடுவிக்கப்படுவார். மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமர் மீது பிரிவு 506-ன் கீழ் சார்ஜ் ஷீட் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்கு மீண்டும் கவனம் பெறுவது பாஜக-விற்கு சாதகமான சூழல் உருவாவதற்கான வாய்ப்புகள் குறையலாம் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.