டெல்லி பாஸ்கிம் விஹாரில் வசித்தவர் நிகில் சவுகான். 19 வயதான இவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆர்யபட்டா கல்லூரியில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓபன் லேர்னிங்கில் பிஏ (ஹான்ஸ்) அரசியல் அறிவியல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று டெல்லியில் கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் சிலர் கத்தியால் குத்தியதில், நிகில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பு, "நேற்று மதியம் கல்லூரி வாயிலுக்கு வெளியே நிகிலை நான்கு மாணவர்கள் கொண்ட கும்பல் தாக்கியது. அந்தக் கும்பல், அவரை கத்தியால் குத்தியது. இந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் நிகிலின் காதலியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் மோதல் உருவாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர், நிகிலைப் பழிவாங்க முடிவு செய்துள்ளார். இந்த நிலையில்தான் நேற்று, நிகிலை வழிமறித்த அந்தக் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அவரைக் கத்தியால் குத்திய மாணவர்கள், அதே கல்லூரியைச் சேர்ந்தவர்கள். அனைவரும் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் டெல்லி பிந்தாபூர் பகுதியைச் சேர்ந்த ராகுல் (19) மற்றும் ஜனக்புரியைச் சேர்ந்த ஹாரூன் (19) ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிகிலின் தந்தை சஞ்சய் சவுகான் , "உங்கள் மகன் கத்தியால் குத்தப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மதியம் 12 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, எங்கள் மகன் இறந்துவிட்டான்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், ”நடிப்பதற்காக மும்பையில் இருந்து நிகிலுக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் அவருக்கு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், தேர்வு முடிந்து அனுப்பலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது” என்று கண்கலங்கினார்.
நிகிலின் தாயார் சோனியா சவுகான், ”என் மகன் மாடலிங் துறையில் சேர விரும்பினான். அவனது இரண்டு பாடல்கள் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளன. தவிர, இன்னும் பல பாடல்களில் நடிக்கப் போகிறேன்” எனத் தெரிவித்திருந்தான்.