கடந்த 21ஆம் தேதி, 2021 ஆம் ஆண்டு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 9 முறை சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகாத நிலையில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்நிலையில் அவரின் காவல் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இன்றுடன் அந்த காவல் முடிவடையும் நிறையில், டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் “கெஜ்ரிவாலின் ED காவலை நீட்டிக்கத் தேவையில்லை” என அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனையடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.15 வரை நீதிமன்றக்காவலில் திகார் ஜெயிலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட போதிலும் முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்யவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
ஆனால், தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அடுத்தது என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதன்படி டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா அரவிந்த் கெஜ்ரிவால்? அல்லது சிறையில் இருந்த படியே முதலமைச்சர் பதவியை தொடருவாரா? ஒருவேளை ராஜினாமா செய்தால் இவர் பதவியை துறந்தால் அடுத்த முதலமைச்சராக பதவியேற்கப் போவது யார்? சிறையில் இருந்தபடியே முதலமைச்சர் பணிகளை தொடர சட்டத்தில் இடம் உள்ளதா? போன்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுந்த வண்ணம் உள்ளன.
7 மக்களவை தொகுதிகளை கொண்ட டெல்லிக்கு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் என்பது மே 25 ஆம் தேதி நடைபெறும் சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கைது மற்றும் திகார் சிறையில் அடைப்பு போன்றவை டெல்லி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே வருகிறது.