டெல்லி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதனை ஏற்று, சிபிஐ அதிகாரிகள் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் காலையில் விசாரணைக்கு ஆஜராகினார். இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற டெல்லி மாநில கல்வித்துறை அமைச்சர் அதிஷி, கெஜ்ரிவாலின் வளர்ச்சியைக் கண்டு பிரதமரும், மத்திய அரசும் அஞ்சுவதாக விமர்சித்துள்ளார்.
கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை அவர்களால் இதனை நிரூபிக்க முடியவில்லை எனவும் அதிஷி குற்றம் சாட்டினார். டெல்லியின் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுபானக் கொள்கை வழக்கில் ஊழல் நடந்ததாக சிபிஐயிடம் எந்த ஆதாரமும் இல்லை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சிபிஐ அதிகாரிகள் முன் 9 மணி நேரம் விசாரணைக்கு ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் இதை அவர் கூறியுள்ளார்.