மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்துள்ளார். முதலமைச்சர் அலுவலகம் செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 48 மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார். கெஜ்ரிவால், ஏற்கனவே ராஜினாமா செய்திருக்க வேண்டும் என டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் சாடினார். இரண்டு நாள் கழித்து ராஜினாமா என்ற நாடகம் எதற்காக என பாஜக தரப்பில் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு, முதலமைச்சர் கெஜ்ரிவால் இல்லத்தில், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். டெல்லி அமைச்சர் அதிஷி, ராகவ் சத்தா, கோபால் ரய், கைலாஷ் கெலாட், சவுரப் பரத்வாஜ், சஞ்சய் சிங், சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.
கூட்டத்திற்கு பின்னர், டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனாவை, மாலை நான்கரை மணிக்கு கெஜ்ரிவால் சந்திக்க உள்ளதாகவும், அப்போது பதவி விலகல் கடிதத்தை வழங்குவதோடு, புதிய முதலமைச்சர் யார் என்பதை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.