டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டார். பின்னர், மார்ச் 27ஆம் தேதியுடன் விசாரணைக் காவல் நிறைவடைந்த நிலையில், கெஜ்ரிவால் மீண்டும் மார்ச் 28ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை வைத்த கோரிக்கையின்படி, அவருக்கு மேலும் 4 நாட்கள் விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டது. ஏப்ரல் 1 வரை விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 1) மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
அப்போது நீதிமன்றத்தில் “கெஜ்ரிவாலின் ED காவலை நீட்டிக்கத் தேவையில்லை” என அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலை, ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பலத்த பாதுகப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். திகார் சிறையில் 2ஆம் எண் அறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். தொடர் கண்காணிப்பிற்காக அங்கு தனிக் காவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். அறைக்கு வெளியே 24 மணிநேர கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில், அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டபோதும், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. ஏற்கெனவே அவர் அமலாக்கத் துறையின் விசாரணைக் காவலில் இருந்தபடியே அரசு திட்டங்களுக்கு உத்தரவிட்டு வந்தார். தற்போது நீதிமன்றக் காவலில் அவர் வைக்கப்படுவதால் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக, இவ்வழக்கு விசாரணையின்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவை,
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறையில் மருந்துகளை வழங்க வேண்டும்.
பகவத் கீதை, ராமாயணம், பிரதமர்கள் முடிவு செய்யப்படும் முறை பற்றி பத்திரிகையாளர் நீர்ஜா செளத்ரி எழுதிய புத்தகம் ஆகிய 3 புத்தகங்களை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும்
மதம் சார்ந்து தற்போது அணிந்திருக்கும் ஆபரணங்களை உடன் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்.
சிறப்பு உணவு வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
மேசை மற்றும் நாற்காலி தர வேண்டும்.
திகார் சிறையில் மொத்தம் 9 அறைகள் உள்ளன. கிட்டத்தட்ட 12,000 கைதிகள் உள்ளனர். இதில், புதிய மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஆம் ஆத்மியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயின் சிறை எண் 7இல் அடைக்கப்பட்டுள்ளார். அதுபோல், சஞ்சய் சிங் எண் 2இல் இருந்து மாற்றப்பட்டு எண் 5இல் அடைக்கப்பட்டுள்ளார். மனீஷ் சிசோடியா சிறை எண் 1இல் உள்ளார். தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதாவும் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், பெண்கள் சிறை எண் 6இல் அடைக்கப்பட்டுள்ளார்.