‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ படம் பார்த்துவிட்டு நண்பரை கொன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ என்ற ஹாலிவுட் படம் நேற்று வெளியானது. பல கற்பனைக் கதாபாத்திரங்களை சூப்பர் ஹீரோக்களாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை கிறிஸ்டோபர் மார்க்கஸ் மற்றும் ஸ்டீபன் மிக்பீலி ஆகியோர் எடுத்துள்ளனர். இதற்கு முன் வெளிவந்த அவெஞ்சர்ஸ் படத்தின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அலன் சில்வஸ்ட்ரியின் இசை அமைத்துள்ளார். டிரெண்ட் ஒப்பலோச்சின் ஒளிப்பதிவு செய்துள்ளார். காமிக்ஸ் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படம் வெளிவந்துள்ளது.
இந்தப் படத்தை டெல்லியை சேர்ந்த அக்னிக் கோஷ் என்ற இளைஞர் திரையறங்கிற்கு சென்று பார்த்துள்ளார். அதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் சிறுவயது முதலே காமிக்ஸ் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் படங்களை பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இந்நிலையில் அக்னிக்கின் நண்பரான ரிஷி, இத்திரைப்படத்தை கிண்டல் செய்து மீம்ஸ் தயாரித்துள்ளார். அதை அக்னிக்கும் அனுப்பியுள்ளார். இதைக்கண்ட அக்னிக் கடுப்பாகி, ரிஷியுடன் வாட்ஸ்-அப்பில் வாதிட்டுள்ளார்.
அப்போது அக்னிக்கிற்கு பிடித்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான "தோர்"ஐ ரிஷி கிண்டல் செய்துள்ளார். அத்துடன் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் "தோர்" வைத்திருப்பதைப் போல அக்னிக் வைத்திருக்கும் போலி சுத்தியையும் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அக்னிக், தான் வைத்திருந்த போலி சுத்தியால் ரிஷியை வேகமாக தாக்கியுள்ளார். இதில் ரிஷி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அக்னிக்கை அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.