ஹரியானாவில் நூஹ் மாவட்டதில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 31) மத ஊர்வலத்தின்போது ஏற்பட்ட ஒரு மோதல், கலவரமாக மாறியுள்ளது. இரு பிரிவினரிடையே ஏற்பட்ட இந்த மோதல், சில மணி நேரங்களில் நூஹ்விலிருந்து குருகிராம் வரை வன்முறையாக பரவியது. இந்த வன்முறை சம்பவங்களில் ஒரு இமாம் மற்றும் 2 ஊர்க்காவல் படையினர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
வன்முறை சம்பவங்களில் காயமடைந்த ஒருவர் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 1) இரவும் குருகிராமில் உள்ள பாட்ஷாபூர் என்ற இடத்தில், குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் கடைகளை அடித்து நொறுக்கிய கும்பல், அப்பகுதியில் உள்ள ஒரு மசூதியின் முன் முழக்கமிட்டும் சென்றுள்ளது.
குருகிராமில் அன்றிரவு 5 இடங்களில் தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்கள் நடந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். வன்முறை சம்பவங்களை அடுத்து குறிப்பிட்ட பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. செக்டார் 70 குடிசைப்பகுதிகள், இரவு நேர வன்முறைகளில் தாக்குதலுக்கு ஆளானதையடுத்து அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள்.
ஹரியானா வன்முறையை அடுத்து, பாதுக்காப்பு கருதி டெல்லியில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்பும் பலப்படுத்துள்ளது. ஹரியானாவின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை கடுமையாக்க உத்தரபிரதேச நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக ராணுவ அதிகாரிகளும் எல்லையில் குவிக்கபட்டுள்ளனர். குறிப்பாக மதுரா, ஆக்ரா, ஃபிரோசாபாத், சஹரன்பூர், மீரட், பாக்பத், ஷாம்லி மற்றும் கவுதம் புத்த நகர் உள்ளிட்ட மேற்கு உத்தரப் பிரதேச காவல்துறை உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவில் ஹரியானாவிலிருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நபர்களை தொடர்ந்து சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வன்முறை நிகழ்ந்த ஹரியானாவின் மேவாட் பகுதி, மதுராவின் கோசி, பர்சானா மற்றும் கோவர்தன் காவல்நிலையங்களை ஒட்டியுள்ளதால், இந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹரியானா எல்லையை ஒட்டிய பகுதிகளில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமையை கண்காணிக்க ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.