டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGIA) நான்கு ஓடுபாதைகள் (Runway) மற்றும் உயரமான ECT (Eastern Cross Taxiway) கொண்ட இந்தியாவின் முதல் விமான நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே மூன்று ரன்வேக்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், புதிய மற்றும் 4-வது ரன்வே-யை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று (ஜூலை 14) திறந்து வைத்தார்.
இத்துடன் டெல்லி விமானநிலையத்தின் வடக்குப் பகுதியை தெற்குப் பகுதியுடன் இணைக்கும் இந்தியாவின் முதல் ஈஸ்டர்ன் கிராஸ் டேக்ஸிவேயை (ECT), சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சிந்தியா திறந்து வைத்தார். இந்த புதிய ரன்வே விமானத்திற்கான டாக்ஸி நேரத்தைக் குறைத்து, தரையிறங்கிய 12 நிமிடத்திற்குள்ளாகவே பயணிகள் விமானத்தை விட்டு வெளியேற உதவுகிறது.
புதிய 4-வது ரன்வே மற்றும் ஈஸ்டர்ன் கிராஸ் டேக்ஸிவேயை திறந்துவைத்து பேசிய சிந்தியா, இந்த ஆண்டு அக்டோபரில் விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறப்பது குறித்தும் பேசினார். அவர் பேசுகையில், “இந்த நான்காவது ஓடுபாதை டெல்லி விமான நிலையத்தை நாட்டிலேயே நான்கு ஓடுபாதைகள் கொண்ட ஒரே விமான நிலையமாக மாற்றியுள்ளது. இந்த ரன்வேயின் பயன்பாட்டிற்கு பிறகு டெல்லி விமான நிலையத்தின் செயல்திறன், ஒரு நாளைக்கான விமான போக்குவரத்து இயக்கத்தை 1400 - 1500 எண்ணிக்கையிலிருந்து கிட்டத்தட்ட 2,000 விமானப் போக்குவரத்து இயக்கங்களாக அதிகரிக்கிறது.
இத்துடன் அடுத்த சவாலையும் நான் அவர்களின் (GMR) முன் வைத்துள்ளேன். அதன்படி விமான நிலையத்தின் நான்காவது முனையத்தின் திறப்பை அக்டோபர் மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து ஈஸ்டர்ன் கிராஸ் டாக்ஸிவே (ECT) குறித்து பேசுகையில், “109 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்யும் திறனை இது உருவாக்கும்” என்று பெருமையுடன் கூறினார்.
மேலும் ஜிஎம்ஆர் நிர்வாகத்தை பாராட்டிய அவர், “இந்த ECT, நான்காவது ஓடுபாதை மற்றும் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் 1 ஆகியவை டெல்லி விமான நிலையத்தை எதிர்காலத்திற்கு தயார்படுத்தி, ஒரு பெரிய சர்வதேச மையத்தை உருவாக்கும் கனவை நிறைவேற்றும்” என்றார்.