டெல்லியில் உள்ள ஜி.டி.பி. நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்த இரண்டு மாணவர்களை தட்டிக் கேட்ட ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று மாலை ஜி.டி.பி. நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள பொது இடத்தில் இரு கல்லூரி மாணவர்கள் சிறுநீர் கழித்துள்ளனர். இதனை அப்பகுதியில் ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் பார்த்து கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த இடத்தைவிட்டு சென்ற இளைஞர்கள் இரவு 15 பேருடன் அந்த இடத்துக்கு வந்து அந்த ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததாகவும், அதை அங்கு ஸ்டேண்டில் இருந்த ஆட்டோ டிரைவர் கண்டித்ததாகவும், அப்போது நடந்த வாக்குவாதத்தின்போது அந்த இளைஞர்கள் கோபமாகப் பேசிவிட்டு சென்றதாகவும் கூறுகின்றனர். தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், 14 முதல் 15 பேர் கொண்ட கும்பல் துணியில் கற்களைக் கட்டி கொடூரமாக தாக்கியதாகவும், இந்தத் தாக்குதலைத் தாங்க முடியாமல் ஆட்டோ டிரைவர் அந்த இடத்திலேயே சுண்டு விழுந்து இறந்ததாகவும், அவர் சரிந்து விழுந்த உடன் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், அதில் சிறுநீர் கழித்த இளைஞர்கள் இருவரும் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கிரோரி மால் கல்லூரிக்குள் சென்றதாகவும் கூறுகின்றனர்.
பிரச்னைக்கு காரணமான இளைஞர்களையும், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.