டெல்லியில், இரவு 8 மணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிகாலை 3 மணிக்கு 26 வயது மருத்துவர் உயிரிழந்த நிகழ்வு, மருத்துவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா என்ற கொடூரன், இந்தியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறான். எப்படி நோய் வந்தது என்றே தெரியாமல் பலர் தங்களது இன்னுயிரை ஈந்து கொண்டிருக்கின்றனர். அப்படி முன்களத்தில் பணியாற்றிய மருத்துவர்தான் 26-வது அனாஸ் முஜாகித். டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவரான அனாஸ், டெல்லி அரசுக்குச் சொந்தமான குரு தேவ் பகதூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
கொரோனா நோயாளிகளிடையே பணியாற்றி வந்ததால், வீட்டில் தங்கியிருக்காமல், தனியார் ஹோட்டலில் தங்கி வந்துள்ளார் அனாஸ். ரம்ஜான் நோன்பு இருந்து வரும் நிலையில், சக மருத்துவ நண்பருடன் தனது வீட்டுக்கு சென்று இப்தார் கொண்டியுள்ளார். மீண்டும் ஹோட்டலுக்கு வரும் வழியில், காய்ச்சல் இருந்ததால், அனாஸுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது மயங்கி விழுந்துள்ளார் அனாஸ்.
தலை மற்றும் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அனாஸுக்கு இரவு 8 மணிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதிகாலை 3 மணிக்கு அனாஸ் உயிரிழந்துவிட்டார்.