தாமதமான புகாரால் வாகன காப்பீட்டை மறுப்பதை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றம்
திருடு போகும் வாகனங்கள் பற்றி தாமதமாக தகவல் தெரிவிப்பதைக் காரணமாகக் கூறி, அவற்றிற்கான வாகனக் காப்பீட்டை மறுப்பதை ஏற்பதற்கில்லை என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
பஞ்சாபில் விவசாயி ஒருவரின் டிராக்டர் கடந்த 2010-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருடு போனது. இதுதொடர்பாக அதே நாளன்று காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் திருட்டு சம்பவம் நிகழ்ந்து 52 நாட்களுக்குப் பின்னரே காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காப்பீடு கோரப்பட்டது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த இரு நீதிபதிகள் அடங்கிய டிவிசன் பெஞ்ச், வாகனம் திருடு போனது தொடர்பாக தாமதமாக தகவல் தெரிவித்தால், காப்பீட்டுத் தொகையை மறுக்கும் உரிமை காப்பீட்டு நிறுவனத்திற்கு இருப்பதாக தெரிவித்தனர்.
ஆனால், இதே அமர்வு விசாரித்த மற்றொரு வாகனத் திருட்டு தொடர்பான வழக்கில், இரண்டு நீதிபதிகளும் வேறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். அதன் விளைவாக, அவ்வழக்கு என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, B.R. கவாய் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. அந்த அமர்வு வழங்கிய தீர்ப்பில், திருடு போகும் வாகனங்கள் பற்றி காப்பீட்டு நி்றுவனங்களுக்கு தாமதமாக தகவல் தெரிவிப்பதை காரணமாகக் காட்டி, அவற்றிற்கான காப்பீட்டுத் தொகையை தடுத்து நிறுத்துவது அநியாயமான, காரணமற்ற செயல் என்று கூறியுள்ளது.