பள்ளி சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மேனகா காந்தி ஆகியோர் நாளை உயர்மட்ட ஆலோசனை நடத்துகின்றனர்.
சமீப காலமாக பள்ளி சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்கள் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஹரியானாவை சேர்ந்த 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளிப் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டார். அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, பள்ளியின் உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த 2 சம்பவங்களும் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பள்ளி சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் பள்ளியின் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து நாளை உயர்மட்ட ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த ஆலோசனையின் போது பள்ளிச் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து முக்கிய திட்டங்கள் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.