கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேஎன்யு வளாகத்திற்குள் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஜேஎன்யு வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன் மாணவர்கள் போராட்டத்தில் நேற்று பங்கேற்று ஆதரவு அளித்தார். தீபிகாவின் ஆதரவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். நடிகை என்பதையும் மீறி சமூக பிரச்னைகளில் குரல் கொடுக்கும் தீபிகாவுக்கு வாழ்த்துகள் என கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் ஒரு தரப்பு தீபிகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வெளிவர இருக்கும் தீபிகாவின் சாபாக் திரைப்படத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #boycottchhapaak என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தீபிகா படுகோன், ''இது போன்று படத்துக்கு எதிராக குரல் கொடுப்பதை எல்லாம் நான் பத்மாவத் பட வெளியீட்டின் போதே பார்த்திருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், ''நான் இப்போது என்ன சொல்ல வேண்டும்? ஏற்கெனவே பத்மாவத் பட வெளியீட்டின் போதே சொல்லிவிட்டேன். இது எனக்கு வலியை கொடுக்கிறது. இப்படி நடப்பது சாதாரணம் என்ற நிலை வந்துவிடாது என்று நம்புகிறேன். நான் ஒருவித கலக்கத்திலும், சோகத்திலும் இருக்கிறேன். இது நம் நாட்டின் அடிப்படையே இல்லை'' என தெரிவித்தார்.
ஜேஎன்யு தாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த தீபிகா, ''ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் எனக்கு கடுமையான கோபம் உள்ளது. இன்னமும் தாக்குதல் நடத்தியர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது இன்னும் மோசமானது'' என தெரிவித்துள்ளார்.