மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையையும், அவர்களை பராமரிப்பவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் நடிகை தீபிகா படுகோன்.
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சில வருடங்களுக்கு முன்பு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவதியுற்றார். பின்னர் தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட்டு, தன்னைப்போல் மன அழுத்தத்தால், மனநல பாதிப்பால் எவரும் தற்கொலையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், லைவ் லவ் லாப் என்ற அமைப்பினை பெங்களூரு, ஒடிசாவில் தொடங்கினார்.
இந்த அமைப்பினை தமிழ்நாட்டிலும் கொண்டுவர திட்டமிட்டார் தீபிகா படுகோன். அதன்படி தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஈக்காட்டில் உள்ள வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்துடன் இணைந்து மனநல திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது லைவ் லவ் லாப். இதற்காக திருவள்ளூர் மாவட்டம் ஈக்காட்டிற்கு நேரில் வந்த தீபிகா படுகோன், மனநலம் பாதித்தவர்களின் பராமரிப்பாளர்களை குழுக்களாக சந்தித்து பேசினார். அப்போது, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதுகுறித்து தீபிகா படுகோன் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், ''மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையையும், அவர்களை பராமரிப்பவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இது மிகவும் முக்கியமானது. எனது தனிப்பட்ட பயணத்தில் கூட பராமரிப்பாளரின் பங்கு மிகவும் முக்கியமானது, அதனால்தான் என் அம்மா இங்கே இருக்கிறார்; அதனால்தான் என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பராமரிப்பாளர்களின் கதைகளைக் கேட்கும்போது, அது எவ்வளவு முக்கியமானது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள், எனது தாயும் பராமரிப்பாளரும் எனது மனநல பாதிப்பின் அறிகுறிகளை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கவில்லை என்றால், இன்று எனது நிலை என்னவாகியிருக்கும். பொதுவாக, மனநோயாக இருந்தாலும் அல்லது வேறு எந்த வகை நோயாக இருந்தாலும் அது உடனிருந்து கவனிக்கும் பராமரிப்பாளரையும் பாதிக்கிறது" என்றார்.
இதையும் படிக்க: 7 மணிநேரத்துக்கு குறைவாக தூங்குறீங்களா? டிப்ரஷன் முதல் இதய நோய் வரை... என்னெல்லாம் வரும்?