கர்நாடக மாநில எல்லையில், மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை உச்சநீதிமன்ற இறுதிதீர்ப்பு வரும்வரை யூனியன் பிரதேசமாக அறிவிக்கவேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
கர்நாடகாவின் பெல்காம் மற்றும் மகாராஷ்டிர மாநில எல்லையில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசிக்கும் பிற பகுதிகள் குறித்த பிரச்னைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த பிரச்னை குறித்த உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை சர்ச்சைக்குரிய அந்த பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகளை, மகாராஷ்டிராவுடன் சேர்ப்பதன் மூலம் அதைத் தீர்க்க மகாராஷ்டிரா விகாஸ் அகாதி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
’கர்நாடகாவில் மராத்தி மொழி பேசும் மக்கள் அமைதியாகப் போராடி வரும் நிலையில், கர்நாடக அரசு ஆணவத்துடன் தங்கள் குரலை அடக்குகிறது’ என்று மகாராஷ்டிர கர்நாடக சிமாவத் என்ற மராத்தி புத்தகத்தை வெளியிட்ட பின்னர் உத்தவ் தாக்கரே இதுகுறித்து பேசினார். இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத், மாநில அமைச்சர்கள் சாகன் புஜ்பால், சட்டமன்ற சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்து கொள்ளவில்லை.
"இந்த பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, கர்நாடக அரசாங்கம் பெல்காம் பெயரை மாற்றி, அவர்களின் இரண்டாவது தலைநகரை அங்கு அமைத்தது. மராத்தி சார்பு நிலைப்பாட்டை எடுத்ததற்காக மராத்தி பேசும் மேயர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது எல்லைப் பகுதிகளில் மராத்தி பேசும் குடிமக்களின் அடக்குமுறையைத் தவிர வேறில்லை. இது நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கிறது. இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கையிலிருந்து கர்நாடக அரசாங்கத்தைத் தடுக்க சர்ச்சைக்குரிய பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கர்நாடகாவை எந்த அரசியல் கட்சி ஆட்சி செய்தாலும், எல்லைப் பகுதிகளில் மராத்தி பேசும் மக்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்கிறது” என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
கர்நாடகாவின் மராத்தி பேசும் பெல்காம், கார்வார் மற்றும் நிபானி ஆகிய சர்ச்சைக்குரிய பகுதிகளை மகாராஷ்டிர மாநிலத்திற்கு கொண்டுவருவதற்கான கடைசி முயற்சிதான் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த மனு என்று சரத் பவார் தெரிவித்தார்.